இருபதாம் நூற்றாண்டில் மனிதன் கண்டுபிடித்த உன்னத சாதனங்களில் முக்கியமான ஒன்று, சினிமா. இன்று, உலகில் சினிமாக் காட்சிகள் நடைபெறாத நாடுகள் இல்லை; சினிமா பார்க்காத நபர்கள் அபூர்வம். இந்தியாவில், சினிமாதான் இரண்டாவது பெரிய தொழில்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றை தெரிந்து கொள்வதற்கு முன், சினிமா எப்போது கண்டு பிடிக்கப்பட்டது, முதல் சினிமா படம் எது என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது அவசியம்.
பொருள்கள் அசைவதைப் படமாக்கும் முயற்சியில் 1826_ம் ஆண்டு முதலே பல்வேறு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1872_ல் குதிரைகளின் கால்கள் அசைவதைச் சிலர் வெற்றிகரமாகப் படம் பிடித்தனர்.
அதற்காக 24 காமிராக்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு, 1889_ல் தாமஸ் ஆல்வா எடிசன் "35 எம் எம்" பிலிமில் சினிமாப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். எடிசன் 1894 வரை பல ஆராய்ச்சிகள் செய்து, அசையும் சினிமாப்படத்தைக் காட்டும் கருவியைத் தயாரித்தார்.
1895_ல் லூமிரே சகோதரர்கள், ஒரு ரெயில் ஓடுவதையும், அது ரெயில் நிலையத்தில் போய் நிற்பதையும் படமாக்கி, ரசிகர்களிடம் கட்டணம் வசூலித்து திரையிட்டுக் காட்டினார்கள். அக்காட்சியைப் பார்த்த சில ரசிகர்கள், பயந்து ஓட்டம் பிடித்தார்கள்.
இதன்பின், சினிமாப்படத்துடன் ஒலியையும் பதிவு செய்யும் முறையை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்தார். ஜெர்மனி விஞ்ஞானிகள் சிலரும் சினிமாப்படம் தயாரிப்பதில் சில முன்னேற்றங்களைக் கண்டுபிடித்தனர். ஊமைப் படங்கள் இதைத்தொடர்ந்து மவுனப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
பேச்சு இல்லாவிட்டாலும், பின்னணி இசை உண்டு. இந்தக் காலக் கட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் சார்லி சாப்ளின். பேசாமல் சைகைகள் மூலமாகவே நகைச்சுவையை வெளிப்படுத்தி, அகில உலகப் புகழ் பெற்றார். 1926_ல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், முதல் பேசும் படத்தைத் தயாரித்தது.
இது சிறிய படம். பெயர் "டான்டுவான்". பரீட்சார்த்தமாகத் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும் படம் வெற்றி பெற்றதால், அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை வார்னர் பிரதர்சார் தயாரித்தனர். முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ் சிங்கர்", 1927 அக்டோபர் 6_ந்தேதி திரையிடப்பட்டது.
திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள். முதல் பேசும் படத்தை உலகுக்கு அளித்த ஹாலிவுட், தொடர்ந்து உலகின் புகழ் பெற்ற திரைப்படக் கேந்திரமாக விஸ்வரூபம் எடுத்தது.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது ஹாலிவுட். 1883_ல் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 7 மைல் தூரத்தில், சுமார் 120 ஏக்கர் நிலத்தை ஒருவர் வாங்கி, வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கத் திட்டமிட்டார்.
பத்திரப் பதிவின்போது, அந்தப் பகுதியின் பெயர் "ஹாலிவுட்" என்று குறிப்பிடப்பட்டது. 1907_ம் ஆண்டில், இந்தப் பகுதியில் ஸ்டூடியோக்களை அமைக்க, நியுயார்க் பிலிம் டிரஸ்ட் ஊக்கமளித்தது. அதன்பின், கொலம்பியா, பாரமவுண்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கே பிரமாண்டமான ஸ்டூடியோக்களை அமைத்தன.
பிறகு, மேலும் பல ஸ்டூடியோக்கள் உருவாயின. 1930_ம் ஆண்டிலிருந்து, ஹாலிவுட்டில் சினிமாப்படத் தயாரிப்பு சூடுபிடிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக 750 படங்கள் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி.எம்., ட்வண்டியத் சென்சுரி பாக்ஸ், வார்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டூடியோக்கள், மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டன.
ஹாலிவுட் விரிவடைந்து கொண்டே போயிற்று. எம்.ஜி.எம். ஸ்டூடியோ மட்டும் 117 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 23 அரங்கங்களைக் கொண்ட இந்த ஸ்டூடியோவில் கிரீடா கார்போ, கிளார்க் கேபிள், ஸ்பென்சர் டிரேசி, எலிசபெத் டெய்லர் முதலிய புகழ் பெற்ற நட்சத்திரங்களை உருவாக்கியது "எம்.ஜி.எம்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக