புதன், 19 ஜனவரி, 2011

சாதனைப் பெண்கள்:இளம் விஞ்ஞானி மாஷா

சாதனைப் பெண்கள்:இளம் விஞ்ஞானி மாஷா!


அமைதியாகப் புன்னகைக்கிறார்... அடக்கமாகப் பேசுகிறார், மாஷா நஸீம். ஆனால் அவர் பேசப் பேச, நம்முன் ஒரு சாதனைச் சரித்திரம் விரிகிறது...
Masha Naseem an Young Scientist - Women Secrets of Success
கல்லூரி மாணவியான மாஷா ஓர் இளம் விஞ்ஞானி. பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கி, ஜனாதிபதி முதல் முதலமைச்சர்கள் வரை அனைவரின் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் முதலாமாண்டு பயிலும் மாஷாவை, மழை விளையாடிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் சந்தித்தோம்...
எனது சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டம் ரவிபுதூர் கடை. அப்பா என். காஜா நஜீமுதீன், மாவட்டக் கருவூலக் கண்காணிப்பாளராக உள்ளார். அம்மா சுமையா பேகம் இல்லத்தரசி. தங்கை இன்ஷா 5-ம் வகுப்புப் படிக்கிறார். சிறு பள்ளி மாணவியாக இருக்கும்போதே எனக்குள் அறிவியல் ஆர்வ விதை விழுந்துவிட்டது. நான்காம் வகுப்புப் படிக்கும்போது, வீட்டுக்குள் திருடர்கள் புகுந்தால் அலாரம் எழுப்பி உஷார்ப்படுத்தும் 'பர்க்ளர் அலாரத்தை' உருவாக்கினேன். ஆளில்லாத வேளையில் வீட்டுக்குள் யாராவது புகுந்தால் 'சென்ஸார்கள்' மூலம் அதை உணர்ந்து ஒலி எழுப்பும் கருவி அது. பள்ளி புராஜெக்டாக அதை உருவாக்கினேன். அதற்குக் கிடைத்த பாராட்டு, நான் மேலும் மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்க உந்துதலாக அமைந்தது.
'பர்க்ளர் அலாரத்தை'த் தொடர்ந்து இதுவரை 8 கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறேன். அவற்றில், 'நெருப்பில்லா முத்திரை வைப்பான்' (பிளேம்லெஸ் சீல் மேக்கர்), 'எந்திர சுமைதூக்கி' (மெக்கானிக்கல் போர்ட்டர்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முக்கிய கடிதங்கள், ஆவணத் தொகுப்புகளுக்கு 'அரக்கு முத்திரை' வைக்கப்படுகிறது. இந்தியாவில் தினந்தோறும் இப்படி 3 லட்சம் முத்திரைகள் வைக்கப்படுகின்றன. அதற்கு, அரக்கை நெருப்பில் உருக்க வேண்டியிருந்தது. அப்போது உருகும் அரக்கு, ஆடைகளில் பட்டு பாழாக்குவது, உடம்பில் பட்டு புண்ணாக்குவது என்ற நிலை இருக்கிறது. அரசு அதிகாரியாக உள்ள எங்கப்பா, அரக்கு சீல் வைக்கும்போது சுட்டுக்கொள்வதையும், ஆடையில் பட்டு பொத்தலாவதையும் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். அப்போதுதான், 'நெருப்பில்லா முத்திரை வைப்பானுக்கான' யோசனை எனக்குப் பிறந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்கான காப்புரிமைக்கு நான் முறைப்படி விண்ணப்பித்திருக்கிறேன். தமிழ்நாடு, குஜராத், கேரள அரசுகள் இதை நடைமுறைப் பயன்பாட்டில் கொண்டுவருவது குறித்து ஆர்வம் தெரிவித்திருக்கின்றன.
  
விமான நிலையங்கள், பஸ், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் சுமைகளை ஏற்றி இறக்குவது ஒரு கடினமான வேலை. அதிலும் குறிப்பாக, பெண்கள், வயதானவர்களுக்கு. மேலை நாட்டிலும் இதற்கு ஒரு நல்ல வசதியான அமைப்பு இல்லாததை நான் நேரில் கண்டேன். சாதாரண 'லக்கேஜ் டிராலி'கள், பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல மட்டுமே பயன்படுகின்றன. பொருட்களை டிராலியில் ஏற்றிவைப்பது, அதிலிருந்து வாகனத்தில் ஏற்றுவது ஆகியவற்றுக்குக் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதுகுறித்து நான் தீவிரமாகச் சிந்தித்தபோது, 'எந்திர சுமைதூக்கி'க்கான யோசனை எனக்குத் தோன்றியது. அதைப் படிப்படியாக மேம்படுத்தி, ஒரு செம்மையான சுமைதூக்கியாக உருவாக்கினேன். இது, ஒரு 'போர்ட்டர்' செய்யும் வேலைகளான, தூக்குவது, சுமப்பது, இறக்குவது ஆகியவற்றைச் செய்யும். இந்த சுமைதூக்கியில் உள்ள பெடலைச் சுழற்றி, 10 வயதுச் சிறுமி கூட 50 கிலோ எடையைத் தூக்க முடியும். சாதாரண டிராலியை விட இதற்கு 700 முதல் ஆயிரம் ரூபாய் வரைதான் கூடுதல் செலவாகும். இந்த சுமைதூக்கி பொதுஇடங்களில் பயன்படுத்தக்கூடியது என்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மோட்டார் இல்லாமல் இதை உருவாக்கியிருக்கிறேன். சமையல் எரிவாயு சிலிண்டர், குடிதண்­ணீர் கேன் போன்றவற்றை தூக்குவது, வைப்பதற்கு இல்லத்தரசிகளும் இதை எளிதாகப் பயன்படுத்தலாம். அன்னியர்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்க வேண்டியதில்லை.
புதுடெல்லியில் நடைபெற்ற, 'உலக கழிப்பறைச் சுகாதார மாநாட்டில்' கலந்து கொண்டதையும், அங்கு விருது பெற்றதையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். அதில், நான் உருவாக்கிய 'அதிநவீன ரெயில் கழிப்பறை' அமைப்பை அறிமுகப்படுத்தினேன். தற்போது, ரெயில்கள் ரெயில் நிலையங்களில் நிற்கும்போது பயணிகள் கழிவறையைப் பயன்படுத்துவதால் அசுத்தம் ஏற்படுகிறது. நான் உருவாக்கியிருக்கும் அமைப்பின் மூலம், நிலையத்தில் நிற்கும்போது ரெயில்பெட்டி கழிவறைகளை என்ஜின் டிரைவர் ஒரு சுவிட்சை இயக்கி அடைத்து வைக்கலாம். அப்போதும் கழிப்பறையைப் பயன்படுத்தினால், கழிவுகள் சேகரமாகிக்கொள்ளும். நிலையத்தை விட்டு ரெயில் வெளியேறியதும் என்ஜின் டிரைவரால் கழிப்பறைகளைத் திறந்துவிட முடியும். எனது இந்தக் கண்டுபிடிப்பை சர்வதேச மாநாட்டில் விஞ்ஞானிகள் பெரிதும் பாராட்டினர். அந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த இளவயதுப் பெண் நான்.
மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ், 'நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷன்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த அமைப்பு நடத்திய தேசிய அளவிலான 'இக்னைட் 2009' போட்டியில் எனது 'நெருப்பில்லா முத்திரை வைப்பானுக்கு' 2-வது பரிசு கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கையால் அப்பரிசைப் பெற்றேன். இந்த ஆண்டும் 'இக்னைட்' போட்டியில் எனது 'எந்திர சுமைதூக்கி' முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கிறது. இதுவரை நான் எனது கண்டுபிடிப்புகளுக்காக 1 சர்வதேச விருதையும், 5 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறேன். தமிழக, கேரள, ஆந்திர, குஜராத் முதல்வர்களையும், ஆளுநர்களையும் சந்தித்துப் பாராட்டையும், பரிசுத்தொகைகளையும் பெற்றிருக்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இருந்து பாராட்டுக் கடிதம் பெற்றிருக்கிறேன். பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், பெருமைக்குரிய தேசிய அறிவியல் உதவித் தொகையை எனக்கு அறிவித்துள்ளது.
மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானுக்கு 10 நாட்கள் கலாச்சார சுற்றுப்பயணம் செய்துவந்தேன். அப்போது ஒரு ஜப்பானிய வீட்டில் தங்கியதும், அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்றதும் நல்லதொரு அனுபவம். ஐக்கிய அரபு எமிரேட்டின் ஷார்ஜா தமிழ்ச் சங்கம் என்னை அங்கு அழைத்து விருது வழங்கிக் கவுரவித்தது.
நான் பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் கற்றிருக்கிறேன். நடனத்திலும், ஓவியத்திலும், ஓட்டப்பந்தயத்திலும் மாவட்ட, மண்டல அளவில் பல பரிசுகளை வென்றிருக்கிறேன். மாடல்களை உருவாக்குவது, வெப் டிசைனிங், 'கேட்' ஆகியவற்றிலும் திறமை உண்டு. பொழுதுபோக்காக இணையத்தில் உலாவுவேன்.
எனது முயற்சிகளுக்கு எல்லாம் தோள் கொடுத்து, தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் பெற்றோர், படித்த பள்ளி ஆசிரியர்கள், தற்போதைய கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகம் ஆகியோரே எனது சாதனைகளின் பின்னணி.
அடுத்து ரோபோட்டிக்ஸில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பொறியியல் படிப்பை முடித்ததும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) அல்லது ஐ.ஐ.டி.யில் எம்.எஸ். பயிலத் திட்டமிட்டிருக்கிறேன். தொடர்ந்து ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஆசை!
வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்கும் கருவியையும் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் மாஷா. அவசியமான கண்டுபிடிப்பு, சீக்கிரமா கண்டுபிடிங்க!

மாஷாவின் கண்டுபிடிப்புகள்
1. எச்சரிக்கை அலாரம்
2. வி.ஐ.பி. பாதுகாப்பு அமைப்பு
3. ஆட்கள் செல்வதற்கான 'கன்வேயர் பெல்ட்' அமைப்பு
4. அதிநவீன ரெயில் கழிப்பறை
5. பெட்ரோல் நிலையங்களில் குழந்தை பாதுகாப்பு அமைப்பு
6. டிரான்ஸ்பரன்ட் டெஸ்ட் டூல் கிட்
7. நெருப்பில்லா முத்திரை வைப்பான்
8. எந்திர சுமைதூக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக