சனி, 30 ஜூலை, 2011

யாரை நம்பி இனி நான் ஓட்டுப்போட…


தாய் மொழி வழிக்கல்வி சிறந்ததா? அந்நிய மொழிவழிக்கல்வி சிறந்ததா? இந்த மாதிரி பேசிட்டு இருந்த நம்ம ஆளுங்க இப்ப… அய்யா ஏதாவது ஒரு கல்விய குடுங்கய்யா, எங்க புள்ளைங்க படிச்சா போதும்ணு கெஞ்ச வச்சிட்டாங்க இந்த அண்ணா திராவிட கழக மாமேதைகள். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் எதிர்கட்சியாக இருக்கும் அண்ணன் விஜயகாந்த் என்னடானா, அவங்க பையன ஹீரோ வா ஆக்க  முயற்சிபண்ணிட்டு இருக்காராம். என்னக் கொடுமைடா சாமி!  புரட்சிக்கலைஞர் என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் ஓர் திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து , கூட்டணி வைத்து , எதிர்கட்சியாக வந்து மக்கள் பிரச்சனையைப் பற்றி சிறிதளவும் கவலையின்றி தனது கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுயநலமான தன்மை சிந்திக்க வைக்கிறது ஓட்டுப்போட்ட மக்களை. 

மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்ட தி.மு.க கூட தாம் ஆட்சி செய்தபோது மக்களுக்காக செய்த ஒரே நல்ல காரியம் என்பதால் மானம் காக்க அறப்போராட்டம் என்று அக்கப்போராக நடத்தியது. ஆனால் கேப்டன்.... கேப்டன்... என்று அழைக்கப்படும் அண்ணன் விஜயகாந்த் ஏன்  அமைதியாக உள்ளார்? உள்ளாட்சித்தேர்தலை கணக்குப் போடுகிறாரோ? உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் தேமுதிக கட்சித்தலைவர் சொன்னது என்னன்னா மக்களே,  
எதிர்க்கட்சி தேமுதிக தலைவர்  விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் கேட்பது குதிரையானாலும் கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்று தற்போதைய சமச்சீர் கல்வி குறித்து  எதிர்க்கட்சி & தேமுதிக தலைவர் குட்டிசுவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்
சொன்னதுக்கப்பறமா ஆளயே காணோமே , கழுதையை வாங்கித்தர நீங்களும் குரல் கொடுக்கலாமே கேப்டன். ஆனால் கேப்டன் பிரபாகரனில் நடித்ததை விட கேப்டனாக நன்றாக நடிக்கிறீர்கள்….
கேப்டனின் சாதனையாக உள்ளது என்னதெரியுமா
இந்தகேப்டன்இதுவரை சரக்கு அடிக்காமலேயே சட்டமன்றம் சென்று வருவதை அவரது கட்சிக்காரர்களே வியப்பாக பார்க்கிறார்களாம். இதுதான் தே.மு.தி.கவின் தற்போதைய சாதனை!
யாரை நம்பி இனி நான் ஓட்டுப்போட… அட போங்கப்பா.

செவ்வாய், 26 ஜூலை, 2011

சமச்சீர் சீருடை (ஒரே சீரான உடை) எப்போது….?சீருடை = சீர் + உடை . இந்த சீருடையை எதற்காக அமல்படுத்தினார்கள்? அனைத்து மாணாக்கர்களும் ஏற்றத்தாழ்வு இன்றி ஒன்றாக பழகவும் படிக்கவும் தானே ! ஒன்றாய் கூடுவோம் நன்றாய் பயிலுவோம் என்று அனைத்து குழந்தைகளும் ஒரே மனநிலையை அடைய சீருடை வழிவகுக்கிறது.

அரசுப்பள்ளிகளில் சீருடை என்பது ஒரு காலத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. ஆண்பிள்ளைகளுக்கு வெள்ளை நிற சட்டையும் காக்கி நிற கால்சட்டையுமாக.. பெண்பிள்ளைகளுக்கு நீலநிற பாவாடையும் வெள்ளை நிற சட்டையுமாக. ஆனால் தற்போதைய நிலை அரசுப் பள்ளியில் தனியார் பள்ளிகளைப்போன்று மாறியுள்ளது. பெருவாரியான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பின்பற்றப்படும் சீருடை முறை, இலவச சீருடையை பயன்படுத்தும் வகையிலேயே உள்ளது.சில அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளை ஒரு பிரிவாகவும், எட்டு, ஒன்பதாம் வகுப்புகளை மற்றொரு வகையாகவும் பிரித்து சீருடை முறைகளை வெவ்வேறு விதங்களில் அமல்படுத்தி வருகின்றன. பள்ளிக்கு வரும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியரால், ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான சீருடைக்கு பணம் செலவிட முடியாது. மேலும் சில நேரங்களில் சீருடையை கடையில் வாங்கும்போது, கட்டம் பெரியதாகவும் , நிறங்களில் சில வேறுபாடுகள் கொண்டதாகவும் பெற்றோர்கள் வாங்க நேரிடுகிறது. இதனால் பள்ளியில் வேறுபாடு சிறிதளவு தெரிகிறது.

தனியார் பள்ளிகளின் கல்வி கொள்(ளை)கையில் சீருடைக் கட்டணமும் உண்டு. இதில் கட்டாயமாக சீருடையை தங்களிடமோ அல்லது தாங்கள் குறிப்பிடும் கடையில் மட்டுமே  வாங்க வேண்டும் என்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டும்தானா… இல்லை தற்போது மாணாக்கர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் ஆழ்வார்திருநகர் புனித அந்தோனியர் பள்ளியில் சீருடையை முழுகட்டணம் செலுத்திய மாணாக்கர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். அப்போது அரசின் கல்விக் கட்டணம் வராத வேளையில், அவர்கள் கேட்க்கும் பணத்தை கட்டணமாக ரசீது கேட்காமல் கொடுத்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சீருடை…. இதில் கொடுமையானது யாதெனில், அவர்கள் கொடுக்கும் சீருடையை வெளியே வாங்க முடியாது, கிடைக்காத அளவிற்கு திட்டமிட்டு வண்ணத்தை வடிவமைத்து தருகிறார்கள்… ! 

படிக்கிறப்பவே நீங்க என்ன நினைக்கிறீங்கனு புரியுதுங்க…. “ ஏலே இன்னும் புள்ளைகளுக்கு பாடப்புத்தகமே தரல அதுக்குள்ள என்ன உனக்கு சீருடைய பத்தி கவலை” இப்படித்தான் நினைகிறீங்களா?
 காவல்துறைணா காக்கி….

 வக்கீல்ணா கருப்பு வெள்ளை...

 அதே மாதிரி மாணவர்கள்ணா…
இந்த கலர் சீருடைணு வந்தா நல்லாருக்கும்ணு தோணுச்சி அவ்ளோதான்ங்க.. மத்தபடி எனக்கும் ஜவுளிக்கடைக்காரங்களுக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை!

மாநிலம் முழுவதும், அனைத்து மாணவர்களுக்கும், ஒரேவிதமான பாடத்திட்டம், ஒரே விதமான பாட நூல்கள், ஒரே விதமான தேர்வு முறை, ஒரே விதமான பள்ளிக்கட்டணம், ஒரே விதமான சீருடை என்று இருப்பதுதான் சமச்சீர்கல்வியின் அடிப்படை. இது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு, ஏற்றத்தாழ்வில்லாத கல்வி எல்லோருக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான்…. !
நன்றி
சித்திரன்
9843792459